நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம்,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது.

சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு உணவு பரிமாறி சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ விருந்து நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தேன். தற்போது முதலில் சேலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. விருந்துக்கு வரும் போது ஒற்றுமை விழிப்புணர்வு ஏற்படும். எனவேதான் தற்போது தொடங்கப்பட்டு உள்ள சமத்துவ விருந்து, என்னுடைய பிறந்த நாளுக்கு பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அரிசி தட்டுப்பாடு

மத்திய அரசு என்.எல்.சி. விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும். என்.எல்.சி. விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசிடம், அண்ணாமலை வலியுறுத்த வேண்டும்.

நியாயமான திட்டங்களை யாராக இருந்தாலும் அதை செயல்படுத்த வேண்டும். ஒரு கட்சி தனது கொள்கை, கோட்பாடுகளை கூறி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க. கொள்கைகளை மக்களிடம் கூறி கட்சியை வலுப்படுத்தவும், மக்களின் மன நிலையை அறியவும் அண்ணாமலை பாதயாத்திரை செல்லலாம்.

தனித்து போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. மேலும் கூட்டணி அமைக்கவும் விரும்பவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலை விட 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கித்தான் நாங்கள் பயணித்து வருகிறோம். பணம் இல்லாத அரசியலை வலியுறுத்தி வருகிறோம். புதிய கூட்டணியை முன்னெடுக்கும் எண்ணம் இல்லை. 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.

தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும். போதை பழக்கத்தை ஒழிக்க எப்படி மறு வாழ்வு மையம் இருக்கிறதோ? அதேபோன்று எதையும் மாற்றுவதற்கு வழி இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும். தேர்தலில் பணம் வேண்டாம் என்று மக்கள் முடிவு எடுக்க வேண்டும். நிச்சயம் மாற்றம் வரும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story