தூத்துக்குடியில்பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு பூங்கா : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடியில்பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா (ஸ்டெம் பூங்கா) மாணவ, மாணவிகள் மற்றும்இளைஞர்கள் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்பான காட்சிகளை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்க்கும் வகையில் 150 இருக்கை வசதிகளுடன் கூடிய மினி திரையரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இயற்பியல், கணித, பொறியியல் உள்ளிட்ட 190 உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், மங்கள்யான், சந்திரயான் போன்ற மாதிரிகள் நிறுவப்பட்டு உள்ளன. இங்குள்ள காட்சி கூடத்தில் இஸ்ரோவில் இருந்து ராக்கெட்கள் ஏவும்போது பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன், பறவைகள், மரங்கள், டைனோசர்கள் போன்றவைகளின் முழு மாதிரிகள் பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், இந்த பூங்காவில் குடிநீர், உணவுக்கூடம், விளையாட்டு சாதனங்கள், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இந்த பூங்கா சாதாரண பொழுதுபோக்கு பூங்கா என பொதுமக்கள் நினைக்க வேண்டாம். மாணவ, மாணவிகளின் நலனுக்காக அறிவியல் அறிவை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட பூங்கா ஆகும். இந்த பூங்கா தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். இந்த பூங்காவின் அருகே பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.