டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
பவானி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பவானி
பவானி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவருடைய மகன் தங்கவேலு (வயது40). இவர் பவானியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காடையாம்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்காக தங்கவேலு அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி, பழுதை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சோகம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு மின்சாரம் பாய்ந்து தங்கவேலு உயிரிழந்தார் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.