'வட இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைக்கு கொடுப்பதில்லை' அன்புமணி ராமதாஸ் பேச்சு


வட இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைக்கு கொடுப்பதில்லை அன்புமணி ராமதாஸ் பேச்சு
x

வட இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்காமல், சொந்த குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

சென்னை,

பா.ம.க. மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது. பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமை தாங்கினார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என கூறுவது சுயநலம். இருவரின் வெற்றிக்குப்பின் இருவரும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்களே அதிக வாக்காளர்களாக உள்ளனர். இருந்தாலும் வாய்ப்புகளுக்காக பெண்கள் காத்திருக்காமல், எடுத்துக்கொள்ள வேண்டும். பிற கட்சிகளை போன்று கூட்டத்தை காட்டி அடையாளமாக அரசியல் செய்திருந்தால் பா.ம.க. என்றைக்கோ ஆட்சிக்கு வந்திருக்கும். எல்லா தகுதியும், திறமையும், புதுமையும் இருந்தாலும் நம்மிடம் அதிகாரம் மட்டும் இல்லை.

அதிகாரம் மட்டும் என்னிடம் கிடைத்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். அது விரைவில் வரும். மதுவிலக்கு குறித்து தி.மு.க.வும் கூறியது, ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் செய்யவில்லை.

சாதிக்கட்சி பிம்பம் உடைப்பு

ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட கவர்னர், ஒன்றைரை மாத இடைவெளியில் சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடவில்லை. நான் ஆட்சியில் இருந்தால் 162-வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைச்சட்டம் கொண்டு வந்திருப்பேன்.

பா.ம.க. என்றால் சாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது. நமக்கு அனைவரும் வேண்டும். வட இந்தியர்களும் நம் சகோதரர்கள் தானே. நாம் செய்ய மறுக்கும் வேலையை அவர்கள் தைரியமாக செய்கின்றனர். வட இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்காமல் சொந்த குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

தமிழர்களுக்கு இலவசமாக அனைத்தும் கிடைப்பதால் வேலை செய்ய முன்வருவதில்லை. பெண்கள் தைரியமாக களத்திற்கு வாருங்கள், சகோதரனாக உதவி செய்ய நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலாம்பாள், மகளிரணி பொருளாளர் திலகபாமா, சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் ரேவதி, மகளிர் அணி நிர்வாகிகள் ஜமுனா கேசவன், நிர்மலா, கீதா ரமணி, செல்வி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னையில் கூடுதல் அரசு பஸ்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தான் இங்கு சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுடன், மனநலம் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. உலக மகளிர் தினத்தன்று மதுவிலக்கு அறிவிப்பை பெண்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க. அரசு இதனை செயல்படுத்த வேண்டும்.

அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சென்னையில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும். அனைத்தும் இலவசமாக இருக்க வேண்டும்' என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.


Next Story