வீரபாண்டியில் பழமை வாய்ந்தகவுமாரியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?பக்தர்கள் எதிர்பார்ப்பு
வீரபாண்டி அருகே கவுமாரியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
முல்லைப்பெரியாறு
அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பு கோவில் முன்பு செல்லும் முல்லைப்பெரியாற்றில் நீராடுவது வழக்கம். இது தவிர தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கும் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வீரபாண்டி வழியாக தான் செல்கிறது. இந்த சாலை வழியாக தான் குமுளி, முல்லைப்பெரியாறு, தேக்கடி, சபரிமலை போன்ற முக்கிய இடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டும்.
இதனால் தினந்தோறும் இந்த வழியாக கார், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மற்றும் பயணிகள் சாலையோரம் அமைந்துள்ள முல்லைப்பெரியாற்றில் நீராடி விட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் கன மழை பெய்தது.
சபரிமலை பக்தர்கள்
இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே தற்போது சபரிமலை சீசன் என்பதால் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்கின்றனர். ஆனால் படித்துறை பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால் ஆற்றில் பக்தர்கள் அச்சத்துடனே குளித்து செல்கின்றனர். எனவே படித்துறையில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.
அங்கு கழிப்பறை வசதியும் இல்லாததால் திறந்்த வெளியை பக்தர்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் முகம் சுழிக்கும் நிலையில் உள்ளது. உடை மாற்றும் அறையும் இல்லை. இதனால் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் முல்லைப்பெரியாற்றின் கரையில் பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் பரிகாரம் செய்து முடித்தபின் அந்த பொருட்களை அதே இடத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.
குப்பை குவியல்
இதே போன்று சுற்றுலா வருபவர்களும் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள உணவு சாப்பிட பயன்படுத்திய தட்டு, இலை போன்றவற்றை வீசி செல்கின்றனர். இதனால் அந்த இடம் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பக்்தர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கவிதா, உப்புக்கோட்டை:- தேனி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவை ஆங்காங்கே உள்ள பாலத்தின் மீது அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின்னர் மீதமான உணவை இலைகளுடன் ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் ஓரிரு நாட்களில் உணவுகள் கெட்டு போய் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் அதிக அளவில் தேங்கிவிடுகிறது. இதனை சரிசெய்ய பாலத்தின் அருகே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
விபத்து அபாயம்
முத்துலட்சுமி, வீரபாண்டி:- நான் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் அருகே வசித்து வருகிறேன். இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் சித்திரை மாதம் 8 நாள் திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். கோவிலில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் தரிசனம் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். படித்துறைகளில் பாசி படா்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் படியில் ஏறும்போது வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கலைச்செல்வி, உப்புக்கோட்டை:- தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் மற்றும் கன்னீஸ்வரமுடையார் கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சாமி கும்பிடுவது மட்டுமின்றி இறந்தவர்களுக்கு மற்றும் ஜாதக பரிகாரங்கள் செய்ய தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் முல்லைப்ெபரியாற்றின் கரையோரம் அமர்ந்து பரிகாரம் செய்பவார்கள். பின்னர் பரிகாரம் செய்த பொருட்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.