அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பந்தலூரில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர், ஜூன்.9-

பந்தலூரில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.

சம்பள உயர்வு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, சிங்கோனா, பாண்டியார், நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசா சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசு அறிவித்தப்படி இதுவரை அந்த சம்பளம் வழங்கப்படவில்லை.

எனவே தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டபடியான விடுப்பு ஊதியம் மற்றும் மருத்துவ விடுப்பு ஊதியம், பணிகொடை, தொடர்ச்சியாக நிலுவையில் உள்ள பண பலன்களை உடனே வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு தொடங்கப்பட்ட தேயிலை தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தற்்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனே பணி வழங்க வேண்டும். பசுந்தேயிலை பறிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் மீண்டும் உடனே இலை பறிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். நடைபாதை தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

பேரணி

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி பேரணி முக்கிய வீதிகள் வழியாக பந்தலூர் பஜாருக்கு வந்தடைந்தது. பேரணியாக சென்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொன்ஜெயசீலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி வினோத், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், அண்ணா தோட்ட தொழிலாளர்கள் சங்க பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார், பந்தலூர் செயலாளர் கந்தையா, நிர்வாகி சின்னகளப்பன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.


Next Story