சனாதனம் குறித்த பேச்சு 'ராகுல் காந்தியை போல் உதயநிதி பேசி இருக்கிறார்' அண்ணாமலை பேட்டி
மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசியது போன்று சனாதனம் குறித்து அமைச்சர் பேசியிருப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி,
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நேற்று தொடங்கினார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. காரணம்
தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதற்குள் பல்லடத்தில் பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டுக்குமே தி.மு.க.தான் காரணம். இங்கு ஜெகனின் வளர்ச்சி பிடிக்காமல் கொலை செய்துள்ளனர். அங்கு தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதன் காரணமாக படுகொலை நடந்துள்ளது.
தமிழத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. அரிவாள் மட்டும்தான் ரோட்டில் இருக்கிறது. போலீசின் லத்தியும் துப்பாக்கியும் குறைவாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காக பேசுவதற்கு முன்பாக தமிழகத்தை பற்றி பேச வேண்டும்.
உதயநிதி பேச்சு
மோடி சமூகம் குறித்து ராகுல்காந்தி பேசியது போன்று, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். வடஇந்தியாவில் எப்படி ராகுல்காந்தி உள்ளாரோ, அதேபோன்று தென்னிந்தியாவுக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு, இந்தியா கூட்டணியின் 5 சதவீத வாக்குகளை குறைத்துள்ளது.
சீமான் பயந்துவிட்டார்
தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான், ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் பயந்து விட்டார். நாங்களும் தி.மு.க.வும் பங்காளி என்கிறார். புகார் கொடுத்த பிறகு சீமான் 2.0 ஆக மாறிவிட்டார். இதனால் அவர் மீது வைத்து இருந்த மரியாதை குறைந்து விட்டது. அவர் தி.மு.க.வை பங்காளி என்று கூறுவார் என்று நினைத்து பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.