திருவையாறில் ஆராதனை விழா: சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்பு
தொடர்ந்து அவர் தியாகராஜர் சுவாமிகளை வழிப்பட்டு தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் விழா மேடையில் பேசினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதனை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இசை கலைஞர்கள் பாடல்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.
விழாவில் கடைசி நாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்பம் பகுள பஞ்சமி நாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும், மேளதாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் விழா தொடங்கியது. முன்னதாக, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என். ரவி காலை 7.45 மணிக்கு விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு சபா சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தியாகராஜர் சுவாமிகளை வழிப்பட்டு தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் விழா மேடையில் பேசினார்.