ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்


ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 17 May 2023 6:45 PM GMT (Updated: 17 May 2023 6:46 PM GMT)

அண்ணா கிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

அண்ணா கிராமம்,

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜான்சி ராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, அயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு-

கூட்டத்தில் அலுவலக மேலாளர் சுடர்வேல் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களை சீரமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கவுன்சிலர் குமரகுரு (தி.மு.க.):- தீர்மானங்கள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்பே கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது திடீரென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜசேகர் (தி.மு.க.):- கள்ளிப்பட்டு பகுதியில் சிமெண்டு சாலை புதிதாக அமைக்க நிதி பற்றாக்குறை உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

தலைவர் ஜானகிராமன்:- தற்போது பள்ளிகளில் சீரமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்டுள்ள திடீர் தீர்மானம் அனைத்தும் கலெக்டர் அலுவலக உத்தரவுப்படி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வாக்குவாதம்

அருள்செல்வம் (வி.சி.க.):- தற்போது 15-வது நிதி குழுவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நிதி வர உள்ளது. இதனால் அனைத்து கவுன்சிலர்களுக்கும் அடிப்படை பணிகள் செய்வதற்கு போதுமான அளவுக்கு நிதியை ஒதுக்கவேண்டும்.

சண்முகம் (த.மா.கா.):- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அனைத்து பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கவுன்சிலர்கள் தொடர்ந்து பேசி வந்தால் மற்ற கவுன்சிலர்கள் எப்படி பேசுவது என கேள்வி எழுப்பினர்.

அப்போது தி.மு.க.கவுன்சிலர்கள் குமரகுரு, ராஜசேகர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். மேலும் எந்த கவுன்சிலரையும் பேச வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் இது போன்ற குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் என கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் குமரகுரு கடந்த முறை வைத்த தீர்மானம் நகலை காட்ட வேண்டும் என கூறி அங்கிருந்து ராஜவேல் என்ற அலுவலரிடம் இருந்த அலுவலக நோட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தலைவர் ஜானகிராமன், இதுபோன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது. மேலும் கவுன்சிலர்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story