இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொடுக்கல் வாங்கல்

'உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த அஸ்வின் பிரசாத் மனைவி வளர்மதி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரது மனைவி கவிதாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்துள்ளது. இதில் இந்து முன்னணி பிரமுகர் குமரவேல் அஸ்வின் பிரசாத்துக்கு உதவியாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி பணத்தைக் கொடுக்காமல் வீட்டைக்காலி செய்ய முயன்ற ரஞ்சித்குமாரை அஸ்வினுடன் சென்ற குமரவேல் தடுத்துள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரஞ்சித்குமாருடன் சேர்ந்து சிலர் குமரவேலை வெட்டிக்கொலை செய்தனர். அஸ்வின் பிரசாத் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பி ஓடிய போது பின் தொடர்ந்து சென்ற போலீசார் நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த ஆத்தியப்பன், கோவை மாவட்டம் ஆதிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3 பேர் கைது

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்களில் குமரி மாவட்டம் கோவளம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், நெல்லை மாவட்டம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித்குமார், கவிதா உள்பட மற்றவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் ஆனந்தகுமார் (வயது 37), 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ஹரிஷாந்த் (21) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுராம்பட்டியைச் சேர்ந்த தமிழ் செல்வம் என்பவரது மகன் செல்வம் (23) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story