மதுரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 6 பேர் கைது
மதுரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை நடத்தி, அந்த அமைப்பை சேர்ந்த 6 நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
மதுரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை நடத்தி, அந்த அமைப்பை சேர்ந்த 6 நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
திடீர் சோதனை
தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மதுரையில் 7 பேரின் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர்.
கோரிப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மதுரை மாவட்ட தலைவர் இத்ரீஸ், நிர்வாகி முகம்மது சிகாம், வில்லாபுரத்தில் மாநில துணை தலைவர் காலித்முகம்மது, ஆலங்குளத்தில் மதுரை மாவட்ட தலைவர் அபுதாகீர், கோமதிபுரத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முகம்மது இஸ்ஹாக், சிலைமான் புளியங்குளத்தில் மண்டல பொறுப்பாளர் காஜாமைதீன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியதுடன், அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல்
மதுரை நெல்பேட்டையை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் முகம்மது யூசுப் என்பவரை கேரளாவில் கைது செய்தனர். இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தெரியவந்ததும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் பல்வேறு முஸ்லிம் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் மடிக்கணினிகள், செல்போன்கள், சுமார் ரூ.3 லட்சம் ரொக்கம், புத்தகங்கள், சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனைக்கும், கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நெல்பேட்டை அண்ணாசிலை அருகே முஸ்லிம் கட்சிகள், அமைப்பினர் உள்பட ஏராளமானோர் திரண்டு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. அதையொட்டி அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.