நெல்லை கல்குவாரி விபத்து: கைதான தந்தை-மகன் சிறையில் அடைப்பு


நெல்லை கல்குவாரி விபத்து:  கைதான தந்தை-மகன் சிறையில் அடைப்பு
x

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கைதான தந்தை, மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கைதான தந்தை, மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கல்குவாரி விபத்து

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

6-வது நபரை ேதடும் பணி

பாறை இடுபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடந்தது. 2 முறை பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு பழுதடைந்து கிடக்கும் பொக்லைன் எந்திரத்தை பழுது பார்க்கவும், அங்கு பாறையை உடைத்ததில் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றவும் 4 பேரை கல்குவாரியில் இறக்கி பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கற்களை அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

தந்தை-மகன் கைது

இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்குவாரியை குத்தகைக்கு எடுத்த உரிமையாளர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபாஸ்டின் ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்குவாரி உரிமையாளரும், காங்கிரஸ் பிரமுகரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த சேம்பர் செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகிேயாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்களை முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு அவர்களை நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) திரிவேணி வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு திரிவேணி, அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து அந்த அறிக்கையுடன் அழைத்து வந்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை

இதையடுத்து சேம்பர் செல்வராஜ், குமார் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், இன்ஸ்பெக்டர்கள் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிறையில் அடைப்பு

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சேம்பர் செல்வராஜ், குமார் ஆகியோரை போலீசார் மீண்டும் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story