மீனவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிச்சென்ற ஆசாமி


மீனவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிச்சென்ற ஆசாமி
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே ஜன்னல் கம்பியை உடைத்து வீடு புகுந்து மீனவரின் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிவிட்டு, ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

புதுக்கடை,

புதுக்கடை அருகே ஜன்னல் கம்பியை உடைத்து வீடு புகுந்து மீனவரின் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிவிட்டு, ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோதிரத்தை கழற்றிய ஆசாமி

புதுக்கடை அருகே உள்ள இனயம், நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது47). மீனவரான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜான்சன் கையில் அணிந்திருந்த ½ பவுன் மோதிரம் மற்றும் அவரது செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள மற்ற அறையில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டிருந்தது.

ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் பணத்தை காணவில்லை. மேலும் வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 ஆகும்.

இதுகுறித்து ஜான்சன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம ஆசாமியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story