ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆஷா பணியாளர்கள் 'செயல்பாட்டாளர்கள்' என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 24 மணிநேரமும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள். இருப்பினும், பணியாளர்கள் என்ற அந்தஸ்து இல்லாமல் 'செயல்பாட்டாளர்கள்' என்ற முறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.2 ஆயிரமும், ஊக்கத் தொகையாக ரூ.1,500-ம் என மாதம் ரூ.3,500-ஐ மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கினாலும், மத்திய, மாநில அரசின் சுகாதாரத் திட்டங்களைத் தான் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை என்று ஆஷா பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆஷா பணியாளர்களின் உழைப்பினையும், அவர்களது தரப்பில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை அழைத்துப் பேசி, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது இருக்கும் அவர்களுடைய மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story