கடன் தொகையை கேட்டு விபத்தில் காயம் அடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு செல்ல விடாமல் தடுத்த காவலாளி:தேனி அரசு மருத்துவமனையில் பரபரப்பு


கடன் தொகையை கேட்டு விபத்தில் காயம் அடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு செல்ல விடாமல் தடுத்த காவலாளி:தேனி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:46 PM GMT)

தேனி அரசு மருத்துவமனையில் கடன் தொகையை கேட்டு விபத்தில் காயம் அடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு செல்ல விடாமல் தடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. கூலித்தொழிலாளி. நேற்று இவர், குன்னூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் தேனிக்கு சென்றார். தேனி அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிச்சாமி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விபத்தில் காயமடைந்த என்னை தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து என்னை வார்டுக்கு மாற்றுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அங்கு பணியாற்றும் காவலாளி ஒருவர், என்னை நிறுத்தி ஏற்கனவே நான் அவரிடம் வாங்கிய பணத்தை கொடுத்தால் தான் வார்டுக்கு செல்ல விடுவேன் என்று தடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்ட போது, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்குவதுடன், அவரின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story