வாலிபர் மீது தாக்குதல்
திருச்செந்தூரில் வாலிபரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நெல்லை ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள வளைவு பகுதியில் தலை மற்றும் முகம் பகுதியில் பலத்த ரத்த காயத்துடன் வாலிபர் ஒரு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் வாலிபர் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35) என்பதும், அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை தாக்கிய மர்மநபர்கள் யார், எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.