வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது


வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது
x

வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கையாடலில் அவர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 'ராஸ்மேக்' (கல்விக்கடன் வழங்கும் கிளை) இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (வயது 38) உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

அதனை ஈடுகட்டுவதற்காக வங்கியில் கல்விக்கடன் வாங்கிய மாணவ, மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக்கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே 2 தவணைகளாக கல்விக்கடன் வாங்கிய ஒரு மாணவர் 3-வது தவணை வாங்குவதற்காக வங்கியை அணுகினார். அப்போது அவரிடம் அலுவலர்கள் நீங்கள் ஏற்கனவே 3-வது தவணை கல்விக்கடன் வாங்கி விட்டீர்கள். எனவே நீங்கள் இனி கல்விக்கடன் பெற முடியாது என கூறியுள்ளனர்.

ரூ.34 லட்சம் கையாடல்

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வங்கி மேலாளர் சிவகுமாரை சந்தித்து நான் 2 தவணைகளாகத்தான் கல்விக்கடன் வாங்கினேன். 3-வது தவணை கடன் வாங்கவில்லை என கூறினார்.

இதுதொடர்பாக மேலாளர் சிவகுமார் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்டவரின் 3-வது தவணை கல்விக்கடன் தொகையை உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியனின் வங்கிக்கணக்கில் மாற்றியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை கல்விக்கடன் வாங்கியவர்கள், செலுத்தியவர்களின் கணக்குகளை தணிக்கை செய்தார். அதில், 137 வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து யோகேஸ்வரபாண்டியன் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622-ஐ கையாடல் செய்து தனது கணக்கிற்கு மாற்றியது தெரிய வந்தது.

உதவி மேலாளர் கைது

இதுகுறித்து வங்கி மேலாளர் சிவக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்தார். அது குறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரபாண்டியனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அதனை ஈடுபட்டுவதற்காக கையாடல் செய்ததையும், நேரடியாகவே அந்த பணத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்தி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622-ஐ கையாடல் செய்தது உறுதியானது.

இதனையடுத்த யோகேஸ்வரபாண்டியனை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story