கெங்குவார்பட்டி நிலையத்தில்வயல்களில் விளையும் நெல் முழுவதையும்கொள்முதல் செய்ய வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்


கெங்குவார்பட்டி நிலையத்தில்வயல்களில் விளையும் நெல் முழுவதையும்கொள்முதல் செய்ய வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

கெங்குவார்பட்டி கொள்முதல் நிலையத்தில் வயல்களில் விளையும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

கொள்முதல் நிலையம்

தேவதானப்பட்டி பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடையாகும் நெல்லை விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. மேலும் பணம் தர தாமதமாகிறது. இதையடுத்து அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கெங்குவார்பட்டியில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இங்கு நெல் கிலோ 21.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது நெல் கொள்முதல் மையத்தில் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 60 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. அதனை விற்க வியாபாரிகளை நாட வேண்டி உள்ளது. அவர்கள் மிக குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதுடன் நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது.

நஷ்டம்

இதுகுறித்து கெங்குவார்பட்டி மஞ்சளாறு நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் கூறியதாவது, தற்போது வீரிய ரகம் பயிரிடப்படுவதால் அதிக அளவில் நெல் மகசூல் கிடைத்து வருகிறது. பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், வடகரை ஆகிய கொள்முதல் மையங்களில் இந்த கட்டுப்பாடு உள்ளதால் நெல் மூட்டைகள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதில் அளிப்பதில்லை.

இதனால் மீதமுள்ள நெல் மூட்டைகளை விற்க நாங்கள் மீண்டும் வெளி வியாபாரிகளை நாட வேண்டி உள்ளது. இதன் காரணமாக எங்களுக்கு அலைச்சல் மட்டுமின்றி நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே வயல்களில் விளையும் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story