சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


சேலத்தில்  ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
சேலம்

அன்னதானப்பட்டி,

கொள்ளை முயற்சி

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சேலம்- பழைய சங்ககிரி சாலையில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர் உள்ளே சென்று கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அதில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தின் வங்கி அதிகாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அதிகாலை 3.30 மணிக்கு மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை அடிக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து அன்னதானப்பட்டி நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம். மையத்துக்குள் அவர்கள் சென்று பார்த்த போது அங்கு ஒரு கடப்பாரை கிடப்பதும், மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து கடப்பாரையை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story