கேரளாவிற்கு காரில் கடத்த முயற்சி:2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
கம்பம், உத்தமபாளையம், கோம்பை பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கம்பம்மெட்டு மலைப்பாதையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் விரட்டி சென்றனர். அப்போது காரை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேரும் தப்பி ஓடினர்.
இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது 42 மூட்டைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் உத்தமபாளையம் உணவு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.