விழிப்புணர்வு வாகன பிரசாரம்


விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 16 Aug 2023 8:15 PM GMT (Updated: 16 Aug 2023 8:15 PM GMT)

தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தேனி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கூறும்போது, இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ, நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை. இம்மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story