ஏ.சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் நிலுவை தொகையை தராவிட்டால் தொடர் போராட்டம் தென்இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவிப்பு


ஏ.சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்  விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் நிலுவை தொகையை தராவிட்டால் தொடர் போராட்டம்  தென்இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவிப்பு
x

ஏ.சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை 10 நாட்களுக்குள் தரவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம் என தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கதலைவர் அய்யாகண்ணு கூறினார்.

கடலூர்


ராமநத்தம்,

வேப்பூர் அருகே ஏ.சித்தூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை குறித்த பேச்சுவார்த்தை வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.

இதில் வேப்பூர் தாசில்தார் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் ஜெயக்குமார், சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முனுசாமி, திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வி காவியா, விவசாயிகள் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒரே தவணையில்

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் தரவேண்டிய நிலுவை தொகை முழுமையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும், வங்கிகளில் விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள கடன்களை முழுமையாக நீக்கி விவசாயிகளுக்கு என்.ஓ.சி.(தடையின்மை)சான்று வழங்க வேண்டும், ஆரூரான் சர்க்கரை ஆலையின் மூலம் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கான நிலுவைதொகையும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கு ஏ.சித்தூர் சர்க்கரை ஆலையின் பொறுப்பாளர் முனுசாமி பேசும்போது, விவசாயிகள் தரவேண்டிய நிலுவை தொகை 100 சதவீதம் தருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியில் விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்ட கடன்களுக்கு கம்பெனி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் ஆகியவை கலந்து பேசி கடன்களை நீக்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.

10 நாட்களுக்குள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சப்-கலெக்டர் பழனி விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்ட 4 கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் பேசி சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பரிசீலனை செய்து 10 நாட்களுக்குள் நல்ல முடிவை தெரிவிப்பதாகவும், அதுவரை விவசாயிகள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார். பின்னர் அய்யாக்கண்ணு பேசும்போது, விவசாயிகள் வங்கிகளுக்கு போகாமலே கையெழுத்து வாங்கி வங்கிகளில் ரூ.160 கோடி கடன் கொடுத்த வங்கி மேலாளர், சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் ஆகியோரை கைது செய்ய வேண்டும்.

இதையெல்லாம் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தின் வாசலில் படுத்து விடுவோம். கம்பெனி நிர்வாகத்தின் மூலம் தரப்பட வேண்டிய நிலுவை தொகை, வாகன வாடகை, தொழிலாளருக்கு தர வேண்டிய சம்பள பாக்கி அனைத்தையும் தர வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.


Next Story