திற்பரப்பு அருவியில் 12-வது நாளாக குளிக்க தடை
திற்பரப்பு அருவியில் 12-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதே போல நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளை பகுதியில் 13.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்றப்பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ.வருமாறு:-
பூதப்பாண்டி-3, கன்னிமார்-2.8, கொட்டாரம்-2.8, மயிலாடி-12.2, நாகர்கோவில்-3, புத்தன்அணை-2, சுருளகோடு-9, தக்கலை-5, குளச்சல்-8.6, இரணியல்-3, பாலமோர்-11.6, திற்பரப்பு-2.8, ஆரல்வாய்மொழி-3.2, அடையாமடை-13, ஆனைகிடங்கு-8, பேச்சிப்பாறை-3.2, பெருஞ்சாணி-3.4, சிற்றார் 1-2, சிற்றார் 2-3, முக்கடல்-5.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
சிற்றாறு பட்டணங்கால்வாயில் குலசேகரம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது கால்வாயில் கிடந்த மண் அகற்றப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையின் மொத்த கொள்ளளவு 18 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 14.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 170 கன அடி நீர் வந்தது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றார்-2 அணையின் மொத்த கொள்ளளவு 18 அடி ஆகும். நீர் மட்டம் 15.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 103 கன அடி நீர் வருகிறது.பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து 875 கன அடியாக குறைக்கப்பட்டது. அதே சமயம் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 125 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையிலிருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் பாசனக்கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. நேற்று 12-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 1 வீடு முழுமையாகவும், தோவாளை தாலுகாவில் ஒரு வீடு பகுதியாகவும் இடிந்தது.