பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: கோவையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: கோவையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கோவையில் உள்ள உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், போத்தனூர், குனியமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சில பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அந்த அமைப்பின் மாவட்ட அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

முஸ்லிம் பெண்கள் போராட்டம்

இதற்கிடையே மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்து உக்கடம் பஸ் நிலையம் அருகே முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை 9 மணியளவில் திரண்டனர். பின்னர் அவர்கள் கோட்டைமேடு பகுதி வழியாக ஊர்வலமாக சென்றதுடன், அங்குள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு திரண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் வடக்கு பகுதி துணை கமிஷனர் மாதவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

133 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் திடீரென பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அப்துல்காதர் தலைமையில் 10 பேர் திரண்டு கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இதேபோல பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை கண்டித்து திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த அமைப்பை சேர்ந்த 123 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story