அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
நரியாபட்டு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியாபட்டு கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கிழக்குப்பகுதிகளில் தெருக்களில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் தெருகளில் ஆங்காங்கே மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கிறது.
நரியாபட்டு பஸ் நிறுத்தம் அருகே சிறுபாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை மூடப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
வடக்கு தெரு பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி சுற்றுப்புறத்தில் கால்நடைகள் கட்டப்பட்டுள்ளன.
பள்ளியின் பின்பகுதிகளில் அதிகளவில் மரம் செடி, கொடிகள் உள்ளிட்டவைகள் அடர்ந்து காணப்படுவதால் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூசு்சிகளால் மாணவ, மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.