பைரவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருமயத்தில் உள்ள பைரவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உண்டியல் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுக்கோட்டை-மதுரை சாலையில் அமைந்துள்ளதால் தினந்தோறும் அந்த வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம். அதே சமயம் கோவில் சாலையோரம் அமைந்திருப்பதால் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் பாதுகாப்பின்றி இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பூசாரி கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் அருகே சென்று பார்த்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து பூசாரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் உண்டியல் இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்பட இருந்தது. இந்தநிலையில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.