மண் வளத்தை அதிகரிக்கும் உயிர் உரங்கள்


மண் வளத்தை அதிகரிக்கும் உயிர் உரங்கள்
x

மண் வளத்தை அதிகரிக்க உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.

ஈரோடு

மண் வளத்தை அதிகரிக்க உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.

நுண்ணுயிர்கள்

மண் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் முக்கிய பங்காற்றுகிறது.

மண்ணில் கரையாத நிலையில் உள்ள சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் வகையில் மாற்றுவதில் நுண்ணுயிர்கள் உதவுகிறது. தொடர் ரசாயன பயன்பாடு காரணமாக மண்ணில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. எனவே நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க உயிர் உரங்களை பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.

நுண்ணுயிர் உரத்தால் ஊட்டச்சத்து தேவை பூர்த்தியாகும். கரிம சத்து அதிகரிக்கும். அனைத்து பயிர்களிலும், பயிர்களின் பல்வேறு வளர்ச்சி பருவத்திலும் இதனை பயன்படுத்தலாம். விதை நேர்த்தி, நாற்று நேர்த்தி, கரணை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

விதை நேர்த்தியில், அனைத்து வகை உயிர் உரங்களும் பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய விதைகளாக இருந்தால், ஹெக்டேருக்கு விதையுடன் 600 கிராமும், பெரிய விதையாக இருந்தால் ஒரு கிலோவும் உயிர் உரமும் தேவைப்படும்.

கரணை நடவு

உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, விதைகளை நனைத்து 30 நிமிடம் வரை வைத்து விதைக்க வேண்டும். உயிர் உரத்தால் விதை நேர்த்தி செய்து ரசாயன பொருட்களை கொண்டு விதை நேர்த்தி செய்வதை தவிர்க்கலாம்.

நாற்றுகளின் வேர்களை நனைத்தல் என்பது பொதுவாக நெல், புகையிலை, காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், காலிபிளவர் பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும். ஒரு கிலோ உயிர் உரத்துடன், 10 லிட்டர் முதல் 15 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஹெக்டேருக்கு தேவையான நாற்றின் வேர்களை 30 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும். கரணை நேர்த்தி என்பது கரும்பு, உருளை கிழங்கு, வாழை போன்ற பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.

இந்த முறைக்கு உயிர் உரம் 1:50 என்ற விகிதத்தில் தேவைப்படும். அதாவது ஒரு கிலோ உயிர் உரத்துடன் 50 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட கலவையுடன் ஹெக்டேருக்கு தேர்வு செய்யப்பட்ட கரணைகளை நடவு செய்வதற்கு முன்பு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.

உயிர் உரம்

ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ உயிர் உரமானது இந்த முறைக்கு தேவைப்படும். தேர்வு செய்யப்பட்ட உயிர் உரங்களை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு 3 முதல் 7 நாட்களுக்கு முன்பும் அல்லது நடவு செய்த ஒரு வாரத்துக்குள் மண்ணில் இட வேண்டும்.

திரவ உயிர் உரமாக இருந்தால், விதை நேர்த்திக்கு ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் விதையும், 125 மில்லி உயிர் உரங்களை கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றுகளின் வேர்களை நனைப்பதற்கு 375 மில்லி உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

நேரடியாக மண்ணில் இடுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி உயிர் உரங்கள் தேவைப்படும். மேலும், உயிர் உரங்களை உலர்ந்த குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளில் உயிர் உரங்களை பயன்படுத்தி ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பதுடன் கரிம சத்தின் அளவையும் அதிகரித்து மண்ணின் வளத்தையும் பாதுகாக்கலாம்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணன் தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story