மங்களம் கண்மாயில் குவியும் பறவைகள்


மங்களம் கண்மாயில் குவியும் பறவைகள்
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:45 PM GMT)

மங்களம் கண்மாயில் பறவைகள் குவிகின்றன.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் மட்டும்தான் அதிகளவு மழை பெய்வது வழக்கம். மாவட்டத்தில் சக்கரக்கோட்டை கண்மாய், தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்களும் அமைந்துள்ளன. இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை அதிக அளவில் பெய்யவில்லை. இதனால் நயினார் கோவில் செல்லும் சாலையில் உள்ள தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்களுக்கும் பறவைகள் வரவில்லை எனகூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்களம் கண்மாயில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக கண்மாயில் வளர்ந்து நிற்கும் கருவேலம் மரம் மற்றும் செடிகளில் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன. குறிப்பாக கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நிற நாரைகள், வெள்ளை நிற கொக்குகள், நீர் காகங்கள் மற்றும் வாத்துகள் உள்ளிட்ட பலவிதமான பறவைகள் குவிந்துள்ளன. மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயை சுற்றியுள்ள வயல்வெளிகளிலும் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன. மேலும் மங்கலம் கண்மாயில் பறவைகள் கூடுகட்டி தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக கண்மாய் பகுதிக்குள் ஏராளமான பெரிய மரங்களை நட்டு இங்கும் பறவைகள் சரணாலயம் உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story