தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் -மத்திய மந்திரி பேச்சு


தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் -மத்திய மந்திரி பேச்சு
x

தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

மடிப்பாக்கம்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பஸ் நிலையத்தில், பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் மத்திய தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு, ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு, தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வழங்கினர்.

பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

மோடியை கண்டு பயம்

சென்னையையும், சென்னை மக்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாசாரத்தின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது. தமிழக மக்கள் நமது பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியை பிரதமர் எதிர்பார்க்கிறார்.

ஊழலற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என பிரதமரும், தமிழக மக்களும் விரும்புகின்றனர். ஆனால், ஏழைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளாமல், தமது மகன், மருமகனின் முன்னேற்றத்தில் கவனம் கொண்டுள்ள ஆட்சியாளர்களால் அத்தகைய ஊழலற்ற ஆட்சியை தர முடியாது.

நரேந்திர மோடியை கண்டால் அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அதனால் அரசு விழாக்களில் மோடியின் படத்தை அவர்கள் வைப்பதில்லை. தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பதை கண்டு ஆளுங்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

தடுக்கிறார்கள்

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தேவையான உணவு பொருட்களை பிரதமர் வழங்கினார். தற்போது வரை அந்த திட்டங்கள் தொடர்கின்றன. வீடு இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.3 கோடி வீடுகளை கட்டி கொடுத்து அவர்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளார்.

இவை அனைத்தும் தமிழகத்துக்கும் சேர்த்தே செய்யப்பட்டுளளது. ஆனால், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய செய்யாமல் தடை செய்து வருகிறது.

தரமற்ற அரிசி

ஏழைகளுக்காக மத்திய அரசு அனுப்பி வைக்கும் நல்ல அரிசியை கொடுக்காமல், தரமற்ற அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகின்றனர். தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்கள், மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். ஆனால், பா.ஜ.க.வினர் என்றாவது அப்படி பேசி இருக்கிறார்களா?.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலை அகற்றி, நல்லாட்சியை நாம் வழங்குவோம். பா.ஜ.க.வை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது. தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story