ஸ்ரீமுஷ்ணத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்


ஸ்ரீமுஷ்ணத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 4 Jun 2023 1:28 AM GMT)

ஸ்ரீமுஷ்ணத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்


ஸ்ரீமுஷ்ணம்,

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி, காமராஜர் சிலை, தேரடி ஆகியவற்றிற்கு இடையே உருவப்படம் அமைப்பதற்காக பந்தல் அமைக்கப்ட்டது. மேலும் அதன் எதிரே தி.மு.க. சார்பில் வாழ்த்து பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் கடைவீதி காமராஜ் சிலையை மறைத்தும், மறுபுறம் கலைஞர் பந்தல் அமைக்கப்பட்ட இடத்தின் மேலேயும் அமையும் விதத்தில் பா.ஜ.க. சார்பிலும் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி அறிந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன், நகர செயலாளர் பூ.செல்வக்குமார், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் மருதை, ஒன்றிய தலைவர் வடமலை மற்றும் நிர்வாகிகளை அழைத்து, பா.ஜ.க. பேனரை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பா.ஜ.க.வினர், பதாகைகளை அகற்ற காலஅவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் பதாககைளை முழுமையாக அகற்ற முடியாததால் கிழித்து அகற்றினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க.வினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்ட பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து தி.மு.க.வினர் கருணாநிதி பதாகைகளை அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பா.ஜ.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.


Next Story