சோதனை ஓட்டத்தின் போது குழாயில் அடைப்பு:வீணாக ஓடிய அத்திக்கடவு-அவினாசி திட்ட தண்ணீர்


சோதனை ஓட்டத்தின் போது குழாயில் அடைப்பு:வீணாக ஓடிய அத்திக்கடவு-அவினாசி திட்ட தண்ணீர்
x

சோதனை ஓட்டத்தின் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், அத்திக்கடவு-அவினாசி திட்ட தண்ணீர் வீணாக ஓடியது.

ஈரோடு

பெருந்துறை

சோதனை ஓட்டத்தின் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், அத்திக்கடவு-அவினாசி திட்ட தண்ணீர் வீணாக ஓடியது.

சோதனை ஓட்டம்

அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து, 6 நீரேற்று நிலையங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த திட்டத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நம்மகவுண்டன்பாளையம், திருவாச்சி சோளி பாளையம், பெருந்துறை சம்பளக் காட்டுப்புதூர் ஆகியவற்றில் தினமும் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதேபோல் நம்பியூர் உம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 2 நீேரற்று நிலையங்களுக்கு நீரை அனுப்பும் சோதனை ஓட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.

குழாயில் அடைப்பு

இந்த நிலையில், நேற்று பகல் 12 மணி அளவில் பெருந்துறை சம்பளக்காட்டுப் புதூர் நீரேற்று நிலையத்திலிருந்து நம்பியூர் உம்மாம்பூண்டி நீரேற்று நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்ப பணியாளர்கள் முயன்றார்கள். அப்போது குழாயில் இடைப்பட்ட பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லவில்லை. இதனால், சம்பளக்காட்டு புதூருக்கு வந்து கொண்டிருக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்ட தண்ணீரை அங்குள்ள தரைமட்ட ராட்சத தொட்டியில் சேமிக்க முடியவில்லை. அதனால் உபரியாக வரும் தண்ணீரை அந்த நீரேற்று நிலையத்திற்கு வடக்கு திசையில் உள்ள சம்பளக்காட்டுப்புதூர் தடுப்பணைக்கு அதிகாரிகள் திருப்பி விட்டனர்.

தடுப்பணை முழுவதும் நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி ஓடியது. அந்த இடத்தை பார்ப்பதற்கு கோபி கொடிவேரி அணை போல காட்சியளித்தது.

வேடிக்கை பார்த்தனர்

சம்பளக்காட்டுப்புதூர் தடுப்பணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள வாழைத் தோட்டங்கள் வழியாக ஊரின் வெட்ட வெளியில் வடக்கே சென்று மலை முருகன் கோவில் பகுதியில் தேங்கி நின்றது.

நேற்று பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மழை வெள்ளம் போல கரைபுரண்டு ஓடிய அத்திக்கடவு - அவினாசி திட்ட தண்ணீரை போலநாயக்கன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.


Related Tags :
Next Story