பூத்துக்குலுங்கும் மாமரங்கள்


பூத்துக்குலுங்கும் மாமரங்கள்
x
தினத்தந்தி 16 March 2023 7:00 PM GMT (Updated: 16 March 2023 7:00 PM GMT)

பழனி பகுதியில் தோட்டங்களில் மாமரங்கள் பூத்து குலுங்குகின்றன.

திண்டுக்கல்

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு உள்ளிட்ட அணைகளை நம்பி பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆயக்குடி, வரதமாநதி அணை, ஆலமரத்துக்களம், புளியமரத்துசெட், அத்திமரத்துகளம், சட்டப்பாறை, கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா, கொய்யா சாகுபடியும் நடந்து வருகிறது.

தற்போது பழனி பகுதியில் உள்ள தோட்டங்களில் மாமரங்கள் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை பிஞ்சு பிடித்து மே மாத தொடக்கத்தில் காய்கள் அறுவடையாகும். இந்தநிலையில் பல இடங்களில் மாமரங்களில் பூச்சி, புழு தாக்குதல் இருந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி வரை நன்றாக பெய்தது. இதனால் மாமரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதையடுத்து மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வழக்கமாக மார்கழி மாதத்தில் பூக்கும் சீசன் தொடங்கி சித்திரை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். எனவே மாமரங்களில் விளைச்சல் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளித்து வருகிறோம் என்றனர்.


Related Tags :
Next Story