பாய்லர்ஆலை மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு


பாய்லர்ஆலை மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு
x

சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையை வழங்கக்கோரி பாய்லர்ஆலை மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி

சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையை வழங்கக்கோரி பாய்லர்ஆலை மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி பாய்லர்ஆலை மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வாலிபர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த ஓரிரு ஆண்டாக முழுமையான சம்பளம் வழங்காமல் பிடித்தம் செய்து வழங்கினார்கள்.

இதை கண்டித்து போராட்டம் நடத்தினோம். அப்போது நடத்திய பேச்சுவார்த்தையில் நிலுவை தொகையை தருவதாக கூறினார்கள். ஆனாலும் இதுநாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகை வழங்கப்படவில்லை. ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஏரிகளுக்கு காவிரி உபரிநீர்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், அப்பணநல்லூர் மற்றும் கொளக்குடி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், கொளக்குடி மற்றும் அப்பணநல்லூர் ஊராட்சிகளில் உள்ள ஏரிகளுக்கு முள்ளிப்பாடி வாய்க்காலில் இருந்தோ அல்லது காவிரியில் இருந்து துணை வாய்க்கால் அல்லது ராட்சத பம்பிங் அமைத்தோ காவிரி உபரி நீரை கொண்டு வந்து நிரம்ப வேண்டும். இதன் மூலம் இரு ஊராட்சிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்ய முடியும். மேலும் எங்கள் ஊராட்சிகளில் 10 நாளைக்கு ஒருமுறை மட்டுமே காவிரி நீர் வினியோகிக்கிறார்கள். ஆகவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.மக்கள் உரிமை மீட்பு இயக்க மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ராபியத்துல் பசிரியா அளித்த மனுவில், திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கல்வியியல் கல்லூரி

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் அளித்த மனுவில், திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் படித்து வரும் பி.எட். 2-ம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு முதலாம் ஆண்டு தேர்வுக்கான முடிவுகள் இதுவரை வரவில்லை. இதற்கிடையே 2-ம் ஆண்டுக்கான தேர்வும் தொடங்கியுள்ளது. சில மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படாததால் தேர்வு எழுதவில்லை. இதற்கு பல்கலைக்கழகம் அனுமதித்த எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்களை சேர்த்ததே காரணம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.


Related Tags :
Next Story