மதுரையில் செப்டம்பர் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி - மாவட்ட கலெக்டர்


மதுரையில் செப்டம்பர் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி - மாவட்ட கலெக்டர்
x

கோப்புப்படம்

மதுரையில் செப்டம்பர் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 2ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கூடல் மாமதுரையிலே கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.


Next Story