அரசு கலைக்கல்லூரியில் புத்தக திருவிழா


அரசு கலைக்கல்லூரியில் புத்தக திருவிழா
x

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ள புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி ஆய்வு செய்தார்.

தர்மபுரி

தர்மபுரி:

புத்தக திருவிழா

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி வரை 11 நாட்கள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில்100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளை கொண்ட ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படஉள்ளன.

இந்த புத்தக திருவிழாவை நடத்துவது குறித்து தகடூர்புத்தக பேரவை, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி பேசியதாவது:- தர்மபுரியில் நடைபெறும் புத்தக திருவிழாவை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க உள்ளார்.

போட்டிகள்

இந்த புத்தக திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. விழாவில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விழாவை முன்னிட்டு தர்மபுரி வாசிக்கிறது என்னும் வாசிப்பு திருவிழா தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிளும் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து புத்தக திருவிழா நடைபெறும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story