அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பா? சேலம் தி.மு.க. எம்.பி.,டுவிட்டர் பதிவால் பரபரப்பு


அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பா? சேலம் தி.மு.க. எம்.பி.,டுவிட்டர் பதிவால் பரபரப்பு
x

அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பு குறித்து சேலம் தி.மு.க. எம்.பி.,டுவிட்டரில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி மற்றும் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 2,160 தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலையை வழங்கினர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தி.மு.க. எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி.க்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கட்சி தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம், என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவால் சேலம் மாவட்ட தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., நேற்று தனது முகநூல் பக்கத்தில், சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன். மாநகராட்சி ஆணையாளர் சிறப்பாக செயல்படக்கூடியவர். எல்லோருடைய நோக்கமும், மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பது தான். தமிழக முதல்-அமைச்சரின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம், என்று தெரிவித்துள்ளார்.


Next Story