வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ஒரு கிலோ வெள்ளி கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ஒரு கிலோ வெள்ளி கொள்ளை
x

திருச்சி விமான நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணப்பாறையில் கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு நடைபெற்றது.

திருச்சி

செம்பட்டு,ஆக.6-

திருச்சி விமான நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணப்பாறையில் கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு நடைபெற்றது.

மர்ம ஆசாமிகள்

திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் (வயது 29). இவர் திருச்சியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 5 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நித்திஷின் தாத்தா சுப்பிரமணியன் (65) என்பவர் நித்திஷின் வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு சென்று பார்க்க முயன்றபோது, 2 மர்ம ஆசாமிகள் வீட்டின் சுவற்றை தாண்டி குதித்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சுப்பிரமணியன் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

12 பவுன் நகை திருட்டு

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்ம ஆசாமிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

மணப்பாறை

இதேபோல் மணப்பாறையை அடுத்த வெள்ளைப் பூலாம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (46). இவர் மணப்பாறை காய்கறி மார்க்கெட் அருகே கட்டுமான பொருட்களுக்கான கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 72 ஆயிரம் பணம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் உள்ள டி.வி.ஆர். திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story