மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்


மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
x

மன்னார்குடி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு காலை உதவி திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி ஜெயினத் தெரு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு, நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் காயத்ரி கிருஷணன் கூறியதாவது:-

முதல் கட்டமாக 4 பள்ளிகளில் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியில் முதற்கட்டமாக நகராட்சி ஜெயினத் தெரு தொடக்கப்பள்ளி, நகராட்சி பெண்ட்லெண்ட் மாடல் தொடக்கப்பள்ளி, நகராட்சி கீழராஜ வீதி தொடக்கப்பள்ளி, நகராட்சி ஜெயங்கொண்டநாதர் தொடக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் முதல் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இப்பள்ளிகளில் பயின்றுவரும் 234 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

ரூ.23 லட்சத்தில் சத்துணவு கூடம்

மன்னார்குடி நகராட்சி ஜெயினத் தெரு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சத்துணவு கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சத்துணவுக்கூடம் மூலம் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்திற்கான உணவுகள் தயார் செய்யப்பட்டு முதற்கட்டமாக 4 நகராட்சி பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.

விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், நகர்மன்ற துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத்திட்டம்) மோகன், நகராட்சி பொறியாளர் குணசேகரன் மற்றும் நகர்மன்ற குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story