வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டுபோனது.
பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரத்குமார் (வயது 29). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும், பழுது பார்க்கும் கடையும் அவர் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சரத்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரான நொச்சியத்திற்கு சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 1¼ பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கடைக்கு பழுது பார்க்க வந்திருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.