வீடியோ எடுத்த வக்கீலை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
வீடியோ எடுத்த வக்கீலை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல் கோல்டன் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் செந்தில்நாதன் (வயது 27). இவர் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு செந்தில்நாதன் புதுக்கோட்டையில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அந்த பஸ் அன்னவாசல் அருகே உள்ள ஆரியூர் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சபரி, ரஞ்சித் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களை சாலையில் நிறுத்தி பஸ்சை வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைகண்ட வக்கீல் செந்தில்நாதன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சபரி, ரஞ்சித் உள்ளிட்டோர் செந்தில்நாதனை தகாத வார்த்தைகளால் திட்டி கை மற்றும் சோடா பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்தையும் பறித்து சென்றனர். இதில், படுகாயமடைந்த செந்தில்நாதனை சக பயணிகள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தங்கராஜ் மகன்கள் ரஞ்சித்குமார் (25), ராஜேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.