புலவிச்சாறு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கொடைக்கானல் அருகே புலவிச்சாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை எழில்சூழ ஏராளமான அருவிகள் உள்ளன. அதில், கொடைக்கானல் அருகே போளூர் மலைக்கிராமத்தில் உள்ள புலவிச்சாறு அருவியும் ஒன்று. இந்தநிலையில் கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள ஏரி, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த வகையில், போளூரில் உள்ள புலவிச்சாறு அருவிக்கும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பச்சை பசேலென அடர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடையே பாறை பகுதியில் வெள்ளியை உருக்கிவிட்டது போன்று புலவிச்சாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது பலரையும் கவர்ந்துள்ளது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவியையும் பார்த்து ரசித்தனர். மேலும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் ரம்மியமாக அமைந்துள்ள புலவிச்சாறு அருவி பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று போளூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.