வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி - 17 பேர் படுகாயம்


வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி - 17 பேர் படுகாயம்
x

வேலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் பலியானார்.

வேலூர்,

பெங்களூரில் இருந்து மளிகை பொருட்கள் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு சென்னையை நோக்கி புறப்பட்டது. லாரியை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் செம்மண்குட்டை கிராமத்தை சேர்ந்த கோபிநாதன் (வயது 40) ஓட்டினார்.

வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே இன்று காலை 5 மணியளவில் வந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அதனால் திடுக்கிட்ட டிரைவர் கோபிநாதன் உடனடியாக லாரியை வலதுபுற சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார்.

பயங்கர சத்தத்துடன் மோதல்

அப்போது சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றியபடி வேலூரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. பஸ் மோதிய வேகத்தில் லாரி சிறிதுதூரம் சென்று சாலையின் நடுவே உள்ள இரும்பு கம்பிகளை இடித்து தள்ளிவிட்டு மின்கம்பத்தில் மோதியபடி நின்றது.

விபத்தில் பஸ் டிரைவர் மாதப்பன்(53), கண்டக்டர் கிருஷ்ணன் (50) மற்றும் பயணிகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு ஆம்புன்சில் அரசு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மீட்டனர்

ஆனால் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மாதப்பனை உடனடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று டிரைவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் அவரை மீட்டு வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவிக்கு பின்னர் மாதப்பன் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 17 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story