அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டுக்கான இடைத்தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்
அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டுக்கான இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஆப்பக்கூடல்,
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. அந்த நேரத்தில், ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஐயப்பன் (53) திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த 3-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 3-வது வார்டுடில் இன்று தேர்தல் நடைபெற்றது.
அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் திமுக சார்பில் சாந்திமணி, அதிமுக சார்பில் செல்லவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் மோதிலால் பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியில் 193 ஆண் வாக்காளர்கள் , 186 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 379 வாக்காளர்கள் உள்ளனர்.
செம்புளிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9.30 மணி நிலவரப்படி 18 சதவீதம் வாக்கு பதிவு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவானது காலை 7-மணி முதல் மாலை 6-மணி வரை நடைபெறுகிறது.