வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்கள்:தனியார் துறைகளில் 1,302 பேர் பணி நியமனம்உதவி இயக்குனர் தகவல்
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 1,302 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று இருப்பதாக உதவி இயக்குனர் ராதிகா கூறினார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 1,302 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று இருப்பதாக உதவி இயக்குனர் ராதிகா கூறினார்.
தனியார் துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாவட்டம் தோறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை தேடும், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தமிழக அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் ஆர்.ராதிகா தலைமையில் தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முகாம்கள்
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் ஆர்.ராதிகா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 321 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்புக்காக பங்கேற்றவர்கள் 4 ஆயிரத்து 509 பேர். இவர்களில் 57 பேர் மாற்றுத்திறனாளிகள். மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,087 பேர் பணி நியமனம் பெற்று இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் 18 பேரும் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1,302 பேருக்கு வேலை
இதுதவிர மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் 4 நடத்தப்பட்டன. இதில் 27 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்து எடுத்தனர்.
இந்த முகாம்கள் மூலம் 54 மாற்றுத்திறனாளிகள் 143 பேர் வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். இவ்வாறு இந்த ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,302 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.
போட்டித்தேர்வு பயிற்சி
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுத்துறை போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் வங்கி தேர்வு, காவல்துறை தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகள் என 4 தேர்வுகளுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. தாளவாடி மலைக்கிராம இளைஞர்கள்-இளம்பெண்களுக்காக தாளவாடியிலேயே பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சிகளில் 312 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப்-4 தேர்வில் 7 பேர் வெற்றி பெற்று பணி வாய்ப்பு பெற்று உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதவி இயக்குனர் ஆர்.ராதிகா கூறினார்.