கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு திட்டவட்டம்


கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு திட்டவட்டம்
x

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதுரை,

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர். 2 நாட்களுக்கு முன்பு 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

இதன்மூலம் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே 22 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story