ரூ.10 கோடி நிலம் தானமாக வழங்கிய குடும்பத்தினர்
திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மேயர் தினேஷ்குமார் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மேயர் தினேஷ்குமார் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
புதிய சாலை
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கம் மற்றும் நொய்யல் ஆற்றையொட்டி சாலைகள் அமைக்கும் பணியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடராஜ் தியேட்டர் ரோடு முதல் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோவில் வரை நொய்யல் ஆற்றின் தென்பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை தனியார் நிலம் வழியாக செல்கிறது. தனியார் நில உரிமையாளர்களிடம் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கேற்ப சொந்த நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைத்தனர். அதன்படி நடராஜ் தியேட்டர் உரிமையாளரான நடராஜின் மகன் துரைராஜின் மனைவி மித்ரா தனது மகனுடன் சேர்ந்து 20 சென்ட் நிலத்தை மாநகர போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தவும் தானமாக அளிக்க முன்வந்தார்.
ரூ.10 கோடி நிலம் தானம்
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மித்ரா மற்றும் அவருடைய மகன் பிரித்விராஜ் ஆகியோர் சேர்ந்து 20 சென்ட் அளவுள்ள நிலத்துக்கான ஆவணங்களை மாநகராட்சிக்கு தானமாக மேயர் தினேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். நிலத்தை தானமாக வழங்கிய மித்ரா குடும்பத்தினரை சால்வை அணிவித்து மேயர் கவுரவித்தார்.
நிலத்தை தானமாக வழங்கிய நடராஜன் குடும்பத்தினர் மாநகரின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். நடராஜன் சொந்த முயற்சியில் சாயப்பட்டறை தொடங்கி சலவைப்பட்டறை, பிரிண்டிங் பட்டறை ஆரம்பித்து இந்திய ராணுவம், இந்திய ரெயில்வே மற்றும்பல தொழில் நிறுவனங்களுக்கு துணிகளுக்கு சாயமேற்றி கொடுத்துள்ளார். ஏழை மக்களின் தேவைக்காக திருமண மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.