தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

சாதிய வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் கிராமத்தில் தமிழ்நாடு தமிழ் சேவா சங்கம் சார்பில் நந்தனார் குருபூஜை விழா திருநாளைப்போவார் அவதார சன்னதியில் நடந்தது. ஜோகா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர்வேம்பு தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நந்தனார் கோவிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் பொதுமக்கள், ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோர் பூணூல் அணிந்து கொண்டனர்.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

சனாதனம் பற்றிய உண்மைகள்

நந்தனார் போல் உள்ள சிவபக்தர் விழாவில் கலந்து கொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நந்தபுராணத்தையும் கற்று வருகிறேன்.

சனாதனத்தை பற்றி 3 உண்மைகளை கூறுகிறேன். முதலில் கடவுள் இந்த உலகத்தை சிருஷ்டித்தார். உலகத்தை தோற்றுவித்த பிறகு ஒவ்வொரு அசைவிலும் கடவுள் இருக்கிறார். நமது அனைவரின் உள்ளத்திலும் ஒரு கடவுள் இருக்கிறார்.

நாம் எத்தனை வகை, வகையாக இருந்தாலும் நம் அனைவரிடமும் கடவுள் இருக்கிறார். நம்முடைய பிரார்த்தனை முறைகள் வேறுபட்டு இருந்தாலும் நம் அனைவருடைய உள்ளங்களிலும் கடவுள் ஒருவர் குடியிருக்கிறார்.

வேதனை அளிக்கிறது

வேதத்தில் நம்மில் யாரும் தாழ்ந்தவரோ, உயர்ந்தவர்களோ அல்ல. நாம் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் பிரிவினையை ஏற்படுத்தி சூத்திரர்கள் என்று பிரித்து வைத்தார்கள். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்தும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த பாகுபாடு நாட்டில் எல்லா பகுதிகளிலும் இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகளை கேட்கும் போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கிறது.

இந்த பாகுபாடு கல்வி, பொருளாதாரம், ஒற்றுமையில் பாகுபாடு என்று இது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரிவினரை ஆலயத்திற்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரி செயல் எங்களுடைய சனாதன தர்மத்திலோ அல்லது இந்து மதத்திலோ இல்லை.

குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கிறது

இந்த சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்றால் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலக்கின்றார்கள். நாங்குநேரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவனை நன்றாக படிக்கிறான் என்று ஆசிரியர்கள் பாராட்டியதற்கு ஒரு காரணமாக கொண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களே அந்த மாணவனின் வீடு சென்று அவனை சரமாரியாக தாக்குகிறார்கள். இந்த மாதிரி கொடுமைகள் தமிழ்நாட்டில் தான் அதிகரித்துள்ளது.

இந்த சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு பஞ்சாயத்து யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி இந்துமதி என்றாலும் கூட அவர் பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. வெறும் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணம். வன்கொடுமை நடக்கும்போது அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை. தண்டிக்கப்படுவதில்லை. ஆகவே இந்த குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்

நாம் அனைவரும் சமூக நீதி பற்றி பேசுகிறோம். ஆனால் அதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். அரசியலில் வெளிப்படையாக, நாம் இந்த மோசமான நிலையில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்க போராட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

இந்தியில் பேசிய கவர்னர்

குருபூஜை விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். அப்போது அங்கிருந்த மொழி பெயர்ப்பாளர் மாறன்நாயகம், இந்தியில் பேசினால் மொழிபெயர்க்க சுலபமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி இந்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு தமிழில் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் பேச முடியவில்லை. அடுத்த விழாவில் தமிழில் பேச முயற்சி செய்கிறேன் என்றார்.


Next Story