ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது: ஐகோர்ட்டு அதிரடி
காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என்று ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை,
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு கோலாகமாக நடக்கிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை. தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு. இந்த மூன்று போட்டிகளையும் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் பார்வையாளர்கள் வரை மதுரை மாவட்டத்தின் இந்த கிராமங்களுக்கு போட்டி நடக்கும் நாட்களில் திரள்வார்கள்.
நடப்பு ஆண்டும் வழக்கம் போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதியும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் உத்தரவிட்ட ஐகோர்ட்டு, தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.