ரூ.40 கோடியில் கட்டப்பட்ட மதகுக்கு காவிரி நீர் வந்தது
கபிஸ்தலம் அருகே ரூ.40 கோடியில் கட்டப்பட்ட மதகுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. இந்த மதகில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே ரூ.40 கோடியில் கட்டப்பட்ட மதகுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. இந்த மதகில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது
ரூ.40 கோடியில் மதகு
காவிரி பாசனத்திற்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து 16-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் நேற்று காலை கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டு தெரு கிராமத்தில் காவிரி - அரசலாறு தலைப்பில் ரூ.40 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மதகுக்கு வந்தடைந்தது.
தண்ணீர் திறப்பு
இந்த மதகில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுப்பணித்துறை காவிரி உதவி செயற்பொறியாளர் முத்துமணி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட மதகை செயல்பாட்டுக்கு திறந்து வைத்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் கோபிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் யசோதா சரவணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அபிஷேகம்
நிகழ்ச்சியில் விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவிரி ஆற்றின் தலைப்பில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள மதகில் தேசியக்கொடி வர்ணத்தில் மின்அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.