இறையான்குடி தடுப்பணைக்கு காவிரி தண்ணீர் வந்தடைந்தது
வேளாங்கண்ணி அருகே இறையான்குடி தடுப்பணைக்கு வந்த காவிரி தண்ணீரில் விதை நெல், பூக்களை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே இறையான்குடி தடுப்பணைக்கு வந்த காவிரி தண்ணீரில் விதை நெல், பூக்களை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா சாகுபடிக்கு ஆண்டு தோறும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னதாகவே மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த தண்ணீர் தஞ்சை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கல்லணையை கடந்த 27-ந் தேதி வந்தடைந்தது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இறையான்குடி தடுப்பணைக்கு வந்தது
இந்த காவிரி தண்ணீர் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் இறையான்குடியில் உள்ள பாண்டவையாறு தடுப்பணைக்கு நேற்று வந்தடைந்தது. அப்போது விவசாயிகள், தடுப்பணையின் தண்ணீர் திறப்பு திருகு பலகைக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து தண்ணீரில் விதை நெல், பூக்களை தூவி வரவேற்றனர்.இதை தொடர்ந்து குறுவை சாகுபடிக்காக நேற்று பாண்டவையாறு கடைமடை பாசன வாய்க்காலில் தண்ணீரை கீழையூர் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், வட்டார வேளாண்மை வளர்ச்சிகுழு தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லென்சோயா சிவபாதம், விவசாயிகள் குமார், திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள்
பாண்டவையாற்றின் மூலம் இறையான்குடி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆறு இறையான்குடிக்கு பாசன பகுதியாகவும், வடக்கு பனையூர், தெற்கு பனையூர், அகரம், முப்பத்திகோட்டகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிகாலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.முன்னதாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவை விவசாயிகள் அதிகப்படுத்தி உள்ளனர்.